1. மெய்யான மனந்திரும்புதல்
பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள், "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள் (அப்போஸ்தலர் 2:37).
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்ப வேண்டும்... என்றார் (அப்போஸ்தலர் 2:38).
இயேசு: மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் (மத்தேயு 4:17).
யோவான் ஸ்நானன், இயேசு கிறிஸ்து, பேதுரு போன்ற அனைவரின் முதலாவது பிரசங்கமே மனந்திரும்புதலைப் பற்றித் தான் இருந்தது.
மனந்திரும்புதலின் இலக்கணம்
மனந்திரும்புதலில் பல காரியங்கள் அடங்கி இருக்கின்றன.
அ) கடந்த காலத்தில் செய்திருக்கும் பாவங்களுக்காக மனவருத்தம் கொள்ளுதல் மனந்திரும்புதலாகும். தன்னுடைய தகப்பனிடத்திலிருந்து சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு, தூர தேசத்திற்கு சென்ற இளைய மகன் தன்னுடைய துன்மார்க்க வாழ்வை நினைத்து மனம் வருந்தினான் (லூக்கா 15:21). ஜனங்களைக் கணக்கெடுக்கும்படி சொல்லி பாவம் செய்த தாவீது மனம் வருந்தினான் (II சாமுவேல் 24:17). செய்யக்கூடாத பாவச் செயல்களை செய்து விட்டேனே என்று மனம் பதைக்கும் ஒவ்வொருவருக்குள் மனந்திரும்புதல் தொடங்குகிறது.
ஆ) தேவனுக்கும் மனிதனுக்கும் விரோதமான பாவச் செயல்களை இனிமேல் செய்ய மாட்டேன் என்று தீர்மானம் செய்வது மனந்திரும்புதலின் அடுத்த படியாகும்.
மனந்திருந்திய மைந்தன் தன் தகப்பனிடத்திற்குத் திரும்பி வந்து, நான் பரத்திற்கு (அதாவது பரலோகத்திலிருக்கிற தேவனுக்கு), விரோதமாகப் பாவஞ் செய்து விட்டேன் என்று சொன்னான் (லூக்கா 15:21), உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன் என்று அறிக்கையிட்டான். தகப்பனிடத்தில் திரும்பி வந்ததே இனிமேல் பாவஞ் செய்ய மாட்டேன் என்னும் நிலையை உணர்த்துகிறது.
இ) விக்கிரகங்களை விட்டு மெய்யான தேவனிடத்தில் திரும்புவது மனந்திரும்புதலாகும்.
ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினீர்கள் (I தெசலோனிக்கேயர் 1:9). இரண்டு விதமான விக்கிரகங்கள் உண்டு.
- i) பொருள் சார்ந்த விக்கிரகங்கள் (Material Images): சிலைகள், படங்கள் போன்றவை பொருள் சார்ந்த விக்கிரகங்கள் ஆகும்.
- ii) மனநிலை சார்ந்த விக்கிரகங்கள் (Mental Images): தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் எது வந்தாலும் விக்கிரகமே. அது மனநிலை சார்ந்ததாகும். பலர் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தேவனைச் சார்ந்த, பரலோக ராஜ்ஜியத்திற்கடுத்த காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதில்லை. தேவனை சார்ந்த, பரலோக ராஜ்ஜியத்திற்கடுத்த காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். தவறும் போது இத்தகைய விக்கிரகத்திற்கு இடம் கொடுக்க நேரிடும்.
ஈ) பரிசுத்தவான்களின் சீர்பொருந்துதல்
பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி. 22:11). இயேசு கிறிஸ்துவினால் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் பொழுது, பரிசுத்தமாக்கப்படுகிறோம். பாவச் செயல்கள் அனைத்தையுமே விட்டுவிட வேண்டும். தேவனுடைய பிள்ளைகள் தங்களிடத்தில் காணப்படும் தகாத பழக்கங்களையும் விட்டுவிடுவதும் மனந்திரும்புதலாகும்.
உ) இனி வரும் வாழ்க்கைக்கு ஆயத்தப்படுதல்
மோசே இனிவரும் பலன் மேல் நோக்கமாக இருந்தான் (எபிரெயர் 11:26). இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்பு இன்னொரு வாழ்க்கை இருக்கின்றது. மனிதன் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்பு பரலோக ராஜ்யத்தில் வாழ்வதற்குத் தகுதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நித்தியத்திலே மனிதர்களுக்கு தேவன் ஆயத்தப்படுத்திக் கொண்டு இருக்கும் இடம் பரலோக ராஜ்யமாகும். பரலோக ராஜ்யத்தைக் குறித்து நினைத்துப் பார்ப்பதுதான் மனந்திரும்புதலாகும். பூமியிலுள்ளவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோசெயர் 3:2). இந்த மனந்திரும்புதலைப் பெற்றுக் கொள்ள உங்களுக்கும் விருப்பம் உண்டா? ஆவி, ஆத்துமா, சரீர கிரியைகளில் மனந்திரும்புதலை பெற்றுக்கொள்ளுங்கள். ஆமென்.