2. பாவமன்னிப்பு
மெய்யான மனந்திரும்புதலைப் பெற்றுக் கொண்டவர்கள் அதில் திருப்தியடைந்துவிடக் கூடாது. ஒவ்வொருவரும் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (அப்போஸ்தலர் 2:38). பாவமன்னிப்பு என்பது இரண்டாவது ஆவிக்குரிய அனுபவமாகும்.
அ) பாவமன்னிப்பின் இலக்கணம்
பாவங்களுக்கு வரும் தண்டனையிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொள்வது தான் பாவ மன்னிப்பாகும். பாவம் செய்வது தண்டனையைக் கொண்டு வரும். ஒரு பொய் சொன்னால் ஒரு பிரம்படி என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் 10 பொய்களைச் சொல்லிவிட்டால், அவருக்கு 10 பிரம்படிகள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த பிரம்படி தண்டனைக்கு பாத்திரமான மனிதன் இயேசு கிறிஸ்துவிடம் வரும்பொழுது, அவன் தண்டனையிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொள்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே பாவ மன்னிப்பைக் கொடுக்க முடியும்.
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் (இயேசு) காயப்பட்டு, நம்முடைய அக்கிரமத்தினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை (தண்டனை) அவர் மேல் வந்தது (ஏசாயா 53:5).
மனிதர்களுடைய பாவங்களுக்கு வர வேண்டிய தண்டனைகளை இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டுள்ளார். இயேசு கிறிஸ்து இதனை சிறுவையிலே செய்து முடித்து விட்டார். பழைய ஏற்பாட்டு காலத்தில் பறவைகள் (புறா), விலங்குகள் (ஆடு, காளை) போன்றவைகள் பாவமன்னிப்பிற்காக பலிகளாக செலுத்தப்பட்டன. இரத்தம் சிந்துதல் இல்லாமல், பாவமன்னிப்பு உண்டாகாது (எபிரெயர் 9:22).
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளின் இரத்தத்தினால் பாவமன்னிப்பு உண்டாகாது (எபிரெயர் 9:12). இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினால் பாவமன்னிப்பை உண்டாக்கி வைத்திருக்கிறார். மனிதனின் பாவங்களைப் போக்குவதற்கு பறவை, விலங்குகளின் இரத்தம் போதுமானதாக இல்லை.
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் (I யோவான் 1:7). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்தமான இரத்தமாகும். பரிசுத்த ஆவியினாலே, கன்னியாக இருந்த மரியாளின் வயிற்றில் இயேசு உருவானார். இது அற்புதமான செயலாகும். இயேசுவின் கன்னிப் பிறப்பு ஆதியாகமம் 3:15-ஐ நிறைவு செய்கிறது. இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக இருக்கின்றார். ஏவாள் ஏமாற்றப்பட்டு பாவத்தில் ஈடுபட்டாள் (ஆதியாகமம் 3:1-6). ஆனால் ஆதாமோ தான் செய்வது பாவம் என்று அறிந்தும் தேவனுடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாவம் செய்தார் (ஆதியாகமம் 3:9-13; I தீமோத்தேயு 2:14). எனவே, பாவ சாபமானது ஆதாமின் வழியாக (ஆண்கள் வழியாக) வருவதாக கருதப்படுகிறது (ரோமர் 5:12-19). இயேசுவின் பிறப்பில் ஆணின் துணையின்மையின்மையால், அவர் பாவமில்லாதவராக பிறந்தார். எனவே, அவரிடத்தில் ஜென்ம பாவம் இல்லை. மரியாளின் மகனானபடியால் இயேசு ஒரு மனிதர். ஆனால் தேவனுடைய பரிசுத்த ஆவியானவரால் பிறந்ததால் அவர் தேவகுமாரன். இவ்விரு தன்மைகளும் அவரில் இருந்தன. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் (I தீமோத்தேயு 3:16).
இயேசு கிறிஸ்து ஒரு பாவம் கூட செய்யவில்லை. எனவே, அவரிடம் கர்ம பாவமும் இருக்கவில்லை (I பேதுரு 2:22). குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் விலையேறப்பெற்ற இரத்தம் ஆகும் (I பேதுரு 1:19). பாவமன்னிப்பை எப்படி பெற்றுக் கொள்வது என்பதைக் குறித்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கு கர்த்தரிடம் பாவ அறிக்கை செய்திட வேண்டும் (I யோவான் 1:9). உங்கள் நினைவிற்கு வரும் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆ) பாவங்கள் காணப்படும் நிலைகள்
மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கொண்டிருக்கிறான். மனிதன் செய்கிற பாவங்கள் இந்த மூன்றையும் பாதிக்கின்றன. பிரியமானவர்களே! மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மை சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாக்குதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம் (II கொரிந்தியர் 7:1). பூரணமான பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த மூன்று நிலைகளிலும் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
-
(i) ஆவியில் உண்டாகும் அசுசிகள்
மனிதனின் ஆவி வீணானதும் பொல்லாததுமான நினைவுகளால் தீட்டுப்படுத்தப்படுகிறது. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்கள் என்பது பொல்லாத சிந்தனைகளையும் கூட குறிக்கிறது (எபேசியர் 6:16). நினைவுகளின் தோற்றங்களில் தீமையான, கேடான எண்ணங்களுக்கு இடமளித்தல் பாவமே (ஆதியாகமம் 6:5,6; மாற்கு 7:21-23). எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் (சங்கீதம் 32:2). பாவ எண்ணங்களால் தீட்டுப்பட்டுப்போன ஆவியைப் பரிசுத்த ஆவியானவர் கழுவுகிறார். அப்பொழுது மனிதன் புறாவைப் போல கபடற்றவனாகக் காணப்படுவான். பரிசுத்தாவியினால் கழுவப்படும்பொழுது, மனிதனின் ஆவி பரிசுத்தமாக்கப்படுகிறது; பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றது (I கொரிந்தியர் 6:11).
-
(ii) ஆத்துமாவில் உண்டாகும் அசுத்தங்கள்
மனிதனின் ஆத்துமாவில் ஏற்படும் அசுத்தங்கள் போக்கப்பட வேண்டும். தேவனால் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்து தேவ கட்டளையை மீறினபொழுது, ஆதாமின் ஆத்துமா கெட்டுப் போயிற்று. ஒரே பரிசுத்தமுள்ள பரலோக தேவனை வணங்காமல், பரலோகத்தோடு சம்பந்தப்படாத பல காரியங்களைத் தெய்வங்களாக வணங்குவதினால் ஆத்துமா தீட்டுப்பட்டு போய்விடுகிறது. பிசாசின் இச்சைகளின்படி செய்தல் மனிதனுடைய ஆத்துமாவைத் தீட்டுப்படுத்தி விடுகிறது (II தீமோத்தேயு 2:26). சங்கீதம் 41:4ல் படிக்கிறோம், "கர்த்தாவே, என் மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவை குணமாக்கும் என்று நான் சொன்னேன்" (ஆத்துமாவில் வியாதி). ரோமர் 6:23ல் படிக்கிறோம், "பாவத்தின் சம்பளம் மரணம்" (ஆத்துமாவில் மரணம்). எபேசியர் 2:1ல் படிக்கிறோம், "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார் (ஆத்மாவில் மரணம்). பாவம் ஆத்துமாவில் வியாதியையும், மரணத்தையும் கொண்டு வருகிறது. "பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" (எசேக்கியேல் 18:20).
"ஸ்திரீயுடன் விபச்சாரம் பண்ணுகிறவன் மதி கெட்டவன்; அப்படி செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்" (நீதிமொழிகள் 6:32). அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.
ஆத்துமாவின் பாவங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்தம் போக்குகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஆத்துமாவில் காணப்படும் பாவங்கள் அனைத்தையும் நீக்குகிறது (I யோவான் 1:7). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவும் என்று கேட்போரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (வெளி. 1:6). ஆத்துமாவிற்காக பாவம் நிவிர்த்தி செய்கிறது இரத்தமே (லேவியராகமம் 17:11).
-
(iii) சரீரத்தில் காணப்படும் பாவக்கறைகள்
மாம்சத்தில் உண்டாகிற அசுசி (அசுத்தங்கள்) நீங்க வேண்டும் (II கொரிந்தியர் 7:1) பாவ இச்சைகள் (மாம்ச இச்சைகள்) சரீர உறுப்புக்கள் மூலமாக கிரியை செய்கின்றன (ரோமர் 7:5). மாம்சத்தில் நன்மை வாசமாக இருப்பதில்லை (ரோமர் 7:18). பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற மனிதனோடு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறாத மனிதனை ஒப்பிடும்போது, பரிசுத்த ஆவியைப் பெறாத மனிதன் தன் சொந்த முயற்சியினால் தேவனுக்கென்று வாழ முயற்சிக்கிறான். ஆனால் நன்மை இல்லாமல் குறைவுள்ளவனாகக் காணப்படான். மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லை என்பதை அறிந்து கொள்வான். ஆகவே அப்படிப்பட்ட மனிதன் நன்மை செய்ய வேண்டும் என்கிற விருப்பம் உடையவனாக இருந்தாலும் தான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்வான் (ரோமர் 7:18,19).
சில வியாதிகள் சரீரத்தில் பாவம் செய்வதினால் உண்டாகிறது. "இதோ நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே" (யோவான் 5:14).
பாக்கு போடுபவரின் பற்கள் கறைபடிந்து காணப்படும். அது வெளியேயும் சில வேளைகளில் தெரியும். மதுபானம் அருந்தி வெறித்திருப்பது, வேசித்தனம், விபச்சாரம் போன்ற பாவங்களினால் மனிதன் தன்னுடைய ஆத்துமாவை மாத்திரம் அல்ல கெடுத்துப்போடுவது தன்னுடைய சரீரத்தையும் கறைப்படுத்துகிறான். ஆனால், இந்த கறைகள் பல வேளைகளில் வெளியே தெரிவதில்லை.
மாம்சத்தின் மீது மனிதனுக்கு ஜெயம் உண்டாகும்படியாக இயேசு கிறிஸ்து மாம்சத்தில் பாடுபட்டார் (I பேதுரு 4:1). "இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்" (எபிரெயர் 10:10).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்படுகிற அனுபவம் உண்டு (I கொரிந்தியர் 6:11). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அப். பேதுரு சொன்னார் (அப்போஸ்தலர் 2:38). யூதர்கள் இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்க வேண்டும், பின்பு இயேசு கிறிஸ்துவின் கட்டளையின்படி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேதுரு இயேசு கிறிஸ்துவின் நாமத்தை முக்கியப்படுத்தி பிரசங்கம் பண்ணினார். "நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் (தேசத்தார்களையும்) சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்" என்று இயேசு கிறிஸ்து கட்டளையாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். "உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்து கொண்டீர்களே" (கலாத்தியர் 3:27). பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது உறவுமுறையைக் குறிக்கிறது. பிதாவை நாம் கர்த்தர் என்று சொல்லலாம், குமாரனை நாம் இயேசு கிறிஸ்து என்று சொல்லலாம். பரிசுத்த ஆவியை கிறிஸ்துவின் ஆவி என்று சொல்லலாம். ஆகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிற முறையோடு காணப்படுகிற நாமத்தை நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் என்று அறிந்து கொள்ளலாம். தேவதூதன் மேய்ப்பர்களுக்குத் தோன்றி இயேசுவின் பிறப்பைக் குறித்து நற்செய்தியை அறிவித்த வேளையில் குறிப்பிட்டது என்ன? "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:11). இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை அப்போஸ்தலர்கள் முக்கியப்படுத்தினார்கள். கொரிந்து சபையிலே பவுலைச் சேர்ந்தவர்கள், அப்பொல்லோவைச் சேர்ந்தவர்கள், கேபாவைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்துவை சேர்ந்தவர்கள் என பல குழுக்கள் இருந்தன (I கொரிந்தியர் 1:12,13). யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகின்றார்களோ, அவருக்கு சொந்தமானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆகவே யோவான் ஸ்நானன் மூலமாக கொடுக்கப்பட்ட மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பெற்றவர்களுக்கு, அப்.பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தார் (அப்போஸ்தலர் 19:5). ஞானஸ்நானத்தில் ஜென்ம பாவ சரீரம் அடக்கம் பண்ணப்படுகிறது. பாவத்திற்கு மரித்துப் போவது தான் ஞானஸ்நானத்தின் மூலம் அடைகிற ஆவிக்குரிய அனுபவம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுதல் என்பது ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதனுடைய சரீரத்திலுள்ள பாவக்கறைகள் கழுவப்படுவதையும் ஜென்ம பாவ சரீரம் அடக்கம் பண்ணப்படுகிறதையும் காட்டுகிறது.
இப்படி பூரண பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்ட உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாக காக்கப்படுவதாக (I தெசலோனிக்கேயர் 5:23).
இ) பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வது எப்படி?
பாவ மன்னிப்பை உலகில் வாழும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள முடியும். பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புவோர் கீழ்க்கண்ட காரியங்களைச் செய்திட வேண்டும்.
- (i) பாவியாக இருப்பதை உணர்ந்து கொள்ளுதல்: பாவங்களே செய்யவில்லை என்று சொல்லுகிறவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்கிறான் (I யோவான் 1:8). பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் இருதயத்திலே குத்தப்பட்டார்கள் (அப்போஸ்தலர் 2:37). பரிசுத்தாவியானவர் பாவத்தைக் கண்டித்து உணர்த்துகிறார் (யோவான் 16:8). அப்படி உணர்த்தப்படும்போது பாவத்தை செய்துவிட்டேன் என்பதை மனிதன் உணர்ந்து கொள்ளுகிறான்.
- (ii) பாவங்களை ஒத்துக் கொள்ளுதல்: தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ் செய்துவிட்டேன் என்று தாவீது ஒத்துக்கொண்டான் (சங்கீதம் 51:4). நான் பாவஞ் செய்தேன் என்று சவுல் சொன்னான் (I சாமுவேல் 26:21). பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கையிடுவது நல்லது.
- (iii) இயேசு கிறிஸ்துவே இரட்சகர்: அவராலேயன்றி (இயேசு கிறிஸ்து) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப்போஸ்தலர் 4:12). பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு (மத்தேயு 9:6). பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு காணிக்கை செலுத்துதல், பலியிடுதல், புண்ணிய யாத்திரை செல்லுதல் தேவையில்லாதது. இயேசு கிறிஸ்து தான் மனிதர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
- (iv) விசுவாசம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி; அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்போஸ்தலர் 16:31). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையைச் சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார் என்று விசுவாசிக்க வேண்டும் (ஏசாயா 53:5). அதனால் மனிதன் தன்னுடைய பாவங்களுக்கு வரும் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவான். அவர் (இயேசு கிறிஸ்து) தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார் (I பேதுரு 2:24). இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களைச் சிலுவையில் சுமந்து விட்டார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வீர்கள். அதே போன்ற விசுவாசம் உங்கள் வீட்டாரிடத்திலும் காணப்படும்போது அவர்களும் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்வார்கள்.
- (v) பாவங்களை அறிக்கையிடுதல்: பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு, மனிதன் தான் செய்திருக்கும் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கையிட வேண்டும். மனிதன் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்யும்பொழுது தேவன் நீதிபரர் என்று சொல்லுகிறவனாயிருப்பான் (சங்கீதம் 51:4). பரிசேயன் தன்னைக் குறித்தே தேவனிடத்தில் சொன்னான். ஆயக்காரனைப் பார்க்கிலும் தன்னை உயர்வான ஸ்தானத்தில் கருதக்கூடியவனாக இருந்தான். தேவனிடம் எதையும் கேட்கவுமில்லை, தனக்கு எல்லாம் இருக்கிறது, தேவனிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள எதுவுமே இல்லை என்பதைப் போன்று காணப்பட்டது பரிசேயனுடைய ஜெபம் (லூக்கா 18:10-14). ஆயக்காரன் தான் உண்மையான பாவ அறிக்கை செய்தான். அதனால்தான் ஆயக்காரன் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டான்; நீதிமானாய்த் தன்னுடைய வீட்டிற்கு திரும்பிப் போனான்.
- (vi) பாவமன்னிப்பின் நிச்சயம்: நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னிப்பார் என்று தேவ வசனம் சொல்லுகின்றது (I யோவான் 1:9). மனிதன் தான் அறிக்கையிட்ட பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னித்துவிட்டார் என்று நம்ப வேண்டும். சிலரிடம் நீங்கள் 'இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னித்து விட்டாரா?' என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் தெரியுமா? எனக்கெப்படி தெரியும்; கடவுளுக்குத் தான் தெரியும் என்பார்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டதை மனிதன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- (vii) பாவமன்னிப்பின் சந்தோஷம்: உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும் என்று தாவீது ஜெபித்தார் (சங்கீதம் 51:12). தாவீது பாவம் செய்தபோது, பாவ மன்னிப்பின் சந்தோஷத்தை இழந்து போயிருந்தார். பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு பாவமன்னிப்பின் சந்தோஷம் உண்டாகும். ஆமென்.