3. ஞானஸ்நானம்

ஞானஸ்நானம் என்னும் சொல் 'Baptizo' எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து உண்டானது. பாப்ட்டிஸ்ஸோ என்னும் சொல்லுக்கு மூழ்குதல் (Immersion) என்பது பொருளாகும். அதாவது தண்ணீரில் மூழ்குவதாகும். ஞானஸ்நானம் என்பது தண்ணீரில் மூழ்க வைக்கும் நிகழ்ச்சியாகும். ஒரு மனிதனின் உள்ளான வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கும் செயல்தான் ஞானஸ்நானமாகும்.

ஞானஸ்நானத்தின் பொருள்

ஞானஸ்நானம் என்பது பாவத்திற்கு மரித்துப் போகும் ஆவிக்குரிய அனுபவமாகும். அதாவது, ஜென்ம பாவத்திற்கும் கர்ம பாவத்திற்கும் மரித்துப் போவதாகும். பாவம் ஞானஸ்நானத்தின் போது அடக்கம் செய்யப்பட்டு விடுவதால், பாவஞ் செய்யக்கூடிய சூழ்நிலை வந்தாலும், அதற்கு எதிர்த்து நிற்கும் சுபாவம் வருகின்றது. அதாவது, பாவஞ் செய்யத் தூண்டும் நபர் அல்லது இடத்திலிருந்து எதிர்திசையில் செல்வதாகும். ஞானஸ்நானம் பாவத்தை அடக்கம் பண்ணும் செயலாக இருப்பதால், அதற்கு அடையாளமாக சரீரம் முழுதும் தண்ணீருக்குள் மூழ்க வைக்கப்படுகிறது.

ஞானஸ்நானம் என்பது மூன்றாவது ஆவிக்குரிய அனுபவமாகும். ஞானஸ்நானம் என்பது பாவத்திற்கு செத்து, நீதிக்குப் பிழைத்தல் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாவத்திற்கு மரித்துப் போவது மட்டும் தான் ஞானஸ்நானமாகும்.

நீதிக்குப் பிழைக்க வேண்டுமானால், பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக் கொள்ளுதல் நான்காவது ஆவிக்குரிய அனுபவமாகவும் இருக்கிறது.

ஒரே ஞானஸ்நானம் தான் உண்டு. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி சரியான முறையில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.