4. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்தாவியின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள் (அப்போஸ்தலர் 2:38) என்று பேதுரு சொன்னார்.
பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக் கொள்வது நான்காவது ஆவிக்குரிய அனுபவமாகும். தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படியே இக்கடைசி நாட்களில் உலகத்தில் அநேக ஆயிரக்கணக்கான ஜனங்கள் பரிசுத்தாவியினால் அபிஷேகம் பண்ணப்படுகின்றனர். ஒருவர் முதன்முதலாக பரிசுத்தாவியை அந்நியபாஷை அடையாளத்துடன் பெற்றுக்கொள்ளும் அனுபவம் "பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல்" என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம் (I கொரிந்தியர் 12:13). கர்த்தராகிய இயேசு பரமேறுவதற்கு முன், "பிதாவின் வாக்குத்தத்தம்" நிறைவேறுவதற்காக எருசலேம் நகரத்தில் காத்திருக்கும்படி தம் சீஷர்களிடம் சொன்னார். "பிதாவின் வாக்குத்தத்தம்" என்பது பரிசுத்தாவியின் ஞானஸ்நானமாகும் (அப்போஸ்தலர் 1:4,5). கர்த்தராகிய இயேசு பரமேறி பத்து நாட்களானபோது, பெந்தெகொஸ்தே நாளில் கர்த்தராகிய இயேசுவின் கட்டளையின்படியே மேல் வீட்டில் காத்திருந்த சீஷர்களும் மற்றவர்களுமாக ஏறக்குறைய நூற்றிருபது பேர் பரிசுத்தாவியைப் பெற்று, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளில் பேசத் துவங்கினார்கள் (அப்போஸ்தலர் 2:1-4). நாம் புதிய அபிஷேகத்தை பெற்று புதிய நிறைவைப் பெற்றுக் கொள்வதின் மூலம் பரிசுத்தாவியானவர் நமக்குள்ளும் நம் மூலமும் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றும்படி நாம் அவருக்குள் வளருகிறோம்.
பழைய ஏற்பாட்டுக் காலங்களிலும் புதிய ஏற்பாட்டு நாட்களிலும் திரித்துவத்தின் மூன்றாம் ஆள்தத்துவமாகிய பரிசுத்தாவியானவர் கிரியை செய்து வருகிற போதிலும், பரிசுத்தாவியின் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுதல் என்பது புதிய ஏற்பாட்டுக் காலத்தின் இணையற்ற ஒரு அனுபவமாகும். ஏனெனில், பரிசுத்தாவியானவர் அதன் மூலம் நமக்குள் வாசம்பண்ணும்படி வருகிறார் (யோவான் 14:16,17). பழைய ஏற்பாட்டு நாட்களில் அவர் மூப்பர்கள், தீர்க்கதரிசிகள், ஆசாரியர், நியாயாதிபதிகள், ராஜாக்கள் ஆகியோர் மத்தியில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை நிறைவேற்றும்படியாக, தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு சிலருடன் கூட இருந்தார். இந்தப் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மாத்திரமே பரிசுத்தாவியானவர் நமக்குள் வாசம்பண்ணும் இந்தச் சிலாக்கியத்தை நாம் பெற்று மகிழ்கிறோம்.
இக்கிருபையின் காலத்தில் வசிக்கும் நாம் பழைய ஏற்பாட்டுக் காலங்களைப் பார்க்கிலும் உன்னதமான ஒரு பிரமாணத்தின்படி ஜீவிக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். இது பரிசுத்தாவியின் அபிஷேகத்தினால் மட்டுமே சாத்தியமாகும். ஆவியின் ஞானஸ்நானம் பெற்றவர்கள் முடிவில் கிறிஸ்துவைப் போன்ற பூரணத்தை அடைந்து கொள்ளும்படி பரிசுத்தாவியானவர் அவர்களுடைய ஜீவியங்களின் ஒவ்வொரு பகுதியிலும் வல்லமையாய்க் கிரியை செய்கிறார்.
மாம்சமான யாவர் மேலும்
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தங்களுடைய அழைப்புக்கும் தேவைக்கும் ஏற்ப, ஒரு குறிப்பிட்ட ஊழியம் செய்வதற்காக மூப்பர்கள், ராஜாக்கள், தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட சிலரோடு மட்டுமே பரிசுத்த ஆவியானவர் தங்கி இருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பரிசுத்த ஆவியின் வரமானது சபையிலுள்ள ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வது எப்படி?
பரிசுத்தாவியினால் நிரப்பப்படுவது மனிதர்களுக்கு கிடைக்கும் மாபெரும் சிலாக்கியமாகும். பரிசுத்தாவியினால் நிரப்பப்பட வேண்டுமானால், கீழ்கண்ட காரியங்களைச் செய்திட வேண்டும்.
- (i) மனந்திரும்ப வேண்டும்: பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் முதலாவது மனந்திரும்ப வேண்டும் (அப்போஸ்தலர் 2:38).
- (ii) பாவமன்னிப்பு: அவர்கள் பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் உடையவர்களாக இருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 2:38).
- (iii) ஞானஸ்நானம்: பாவத்திற்கு மரித்துப் போயிருக்க வேண்டும். அதற்காக தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். "பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்தாவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" (அப்போஸ்தலர் 2:38,39) என்றார்.
- (iv) வாஞ்சையோடு வேண்டிக் கொள்ள வேண்டும்: பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்குப் பரிசுத்தாவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் (லூக்கா 11:13). பரிசுத்தாவியை எனக்குத் தாரும் என்று ஜெபம் பண்ணுங்கள். அப்பொழுது பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்வீர்கள்.
- (v) தேவ ஊழியர் கை வைத்து ஜெபித்தல்: அவர்கள் பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம் பண்ணி அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்தாவியைப் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 8:16,17). பவுல் அவர்கள் மீது கைகளை வைத்த பொழுது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார் (அப்போஸ்தலர் 19:6).
- (vi) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதற்கான அடையாளம்: "அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்" (அப்போஸ்தலர் 19:6). அந்நிய பாஷையைப் பேசுதல் பரிசுத்தாவியைப் பெற்றுதற்கான அடையாளமாகும்.
- (vii) நமக்குள் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர்: பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்குள் வாசம்பண்ண முடியவில்லை. ஆனால், அவர் அவர்களுடன் வாசம் பண்ணினார். சத்திய ஆவியானவர், உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் (யோவான் 14:17) என்று இயேசுவானவர் தம்முடைய சீஷர்களுக்குக் கூறினார். இதிலிருந்து, பரிசுத்த ஆவியானவரை ஓரளவு அனுபவிக்கும் சிலாக்கியம் பெற்றவர்களாகிய சில பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்குங் கூட தங்களுக்குள் அவர் வாசம் பண்ணும் ஆனந்த பாக்கியத்தை அனுபவிக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது.
- (viii) பரிசுத்த ஆவியை ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும்? மனிதராகப் பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மனிதத்தன்மை (Human nature) உண்டு. மனிதத்தன்மை இவ்வுலக வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கின்றது; ஆனால் மறுமையின் வாழ்வுக்கு அது போதாது. இனி வரப்போகும் மறுமையின் வாழ்க்கைக்குத் தகுதியைப் பெற்றுக்கொள்ளுவதற்கு தெய்வீக தன்மையையும் (Divine nature) பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த தெய்வீகத் தன்மையை மனிதருக்குள் கொண்டு வருகின்றவர் தான் பரிசுத்தாவியானவர். தேவனுடைய ஆவி தான் பரிசுத்தாவி என்றழைக்கப்படுகின்றது. கீழ்கண்ட காரியங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்தைப் பற்றி (அ) ஒரு விசுவாசியில் (ஆ) சபையில் (இ) தேவனுடைய ஊழியக்காரரில் என்று மூன்று தலைப்புகளில் நாம் படிப்போமாக.
அ) ஒரு விசுவாசியில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம்
- i) மறுபடியும் பிறந்த ஒவ்வொருவரும் மீட்கப்படும் நாளுக்கு என்று பரிசுத்த ஆவியினாலே முத்திரையிடப்படுகிறான்: "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது, (after that ye believed) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்" (எபேசியர் 1:13). ஒரு விதத்தில், நமது ஆத்துமாவைப் பொறுத்தமட்டில் நாம் ஏற்கனவே மீட்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நமது சரீர மீட்பு இனி நடக்கவிருக்கிறது. அப்.பவுல், "அதுவுமல்லாமல், ஆவியின் முதற் பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்" என்று கூறுகிறார் (ரோமர் 8:23). மேலும், அப்.பேதுரு "கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறோம்" என்கிறார் (I பேதுரு 1:5).
- ii) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற விசுவாசிகள் ஒவ்வொருவருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிறார்: "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்" (யோவான் 14:16,17). "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (I கொரிந்தியர் 3:16).
- iii) இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாய் இருக்க பரிசுத்த ஆவியானவர் வல்லமை கொடுக்கிறார்: "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (அப்போஸ்தலர் 1:8). ஊக்கமான ஜெபத்தினாலும், கர்த்தரில் காத்திருப்பதினாலும் பரிசுத்த ஆவியின் வல்லமையானது அவ்வப்போது நமக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். உபத்திரவம் வந்த வேளைகளில் விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் கூடி ஊக்கமாக ஜெபம் பண்ணினார்கள் என்று அப்போஸ்தலர் 4ம் அதிகாரத்திலும், "கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள்" என்று அப்போஸ்தலர் 4:33ம் வசனத்திலும் நாம் வாசிக்கிறோம்.
- iv) நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்று பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஆவியுடனே கூட சாட்சிக் கொடுக்கிறார்: "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்று (English: as sons) ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்" (ரோமர் 8:16).
- v) பரிசுத்தவான்களோடுகூட பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்: "இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார். இந்த சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி" (அப்போஸ்தலர் 5:31,32).
- vi) பரிசுத்த ஆவியானவர் சரீரத்தின் செய்கைகளை அழிக்கிறார்: "மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்" (ரோமர் 8:13).
- vii) சாவுக்கேதுவான நம் சரீரங்களை பரிசுத்த ஆவியானவர் உயிர்ப்பிக்கிறார்: "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்" (ரோமர் 8:11).
- viii) பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார்: "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்" (ரோமர் 8:26; யூதா 20).
- ix) பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பரிசுத்தமாக்குகிறார்: வேதாகமம் மூன்று விதமான பரிசுத்தமாகுதலைக் குறித்து விவரிக்கிறது. இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்படுதல்; தேவனுடைய வசனத்தினால் பரிசுத்தமாக்கப்படுதல்; பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்படுதல். பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்படுதல் என்பது பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலம் நம்முடைய உள்ளான மனுஷனில் உண்டாகும் சுத்திகரிப்பே ஆகும். "அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு" என அப்.பவுல் கூறுகிறார் (ரோமர் 15:15). "நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்" (II தெசலோனிக்கேயர் 2:13).
- x) பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்: "யூதேயா, கலிலேயா, சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்தி விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின" என்று நாம் வசிக்கிறோம் (அப்போஸ்தலர் 9:31). பரிசுத்த ஆவியானவர் தேற்றரவாளனென்று அழைக்கப்படுகிறார் (யோவான் 16:7).
- xi) பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்: "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தான் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" (யோவான் 16:13). சத்தியம் மூன்று விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது:
• முதலாவதாக, ஆவியானவர் தேவனுடைய வசனத்திலிருந்து நமக்குச் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்.
• இரண்டாவதாக, நாம் செல்ல வேண்டிய வழியில் அவர்தாமே நம்மை நடத்துகிறார்.
• மூன்றாவதாக, அவர் நமக்கு மறைவான இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
"எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்" என்று அப்.பவுல் கூறுகிறார் (I கொரிந்தியர் 2:9,10). - xii) இனிவரும் உலகத்தின் பலன்களை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார்: வேதாகமம் முழுவதிலும் தேவனும் அவரது வல்லமையும் அடையாளங்கள், அற்புதங்கள், பலத்த செய்கைகள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். "முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்" என்று அப்.பவுல் எபிரெயருக்கு எழுதுகிறார் (எபிரெயர் 2:3,4). பின்மாற்றம் அடைந்து போவதின் பயங்கரத்தைக் குறித்து அவர் கூறுகிறதாவது: ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியை பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்" (எபிரெயர் 6:4-6). அடையாளங்களும் அற்புதங்களும் இனிவரும் உலகத்தின் பெலன்களை வெளிப்படுத்துகின்றன.
- xiii) பரிசுத்த ஆவியானவர் நம்மை இளைப்பாறப்பண்ணுகிறார்: அந்நிய பாஷைகளில் பேசுவதின் நோக்கங்களிலும் ஆசீர்வாதங்களிலும் ஒன்று விசுவாசியை இளைப்பாறப் பண்ணுவதாகும். "பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்கிறார்கள்" என்று நாம் வாசிக்கிறோம் (ஏசாயா 28:11,12). "அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்" (I கொரிந்தியர் 14:39) என்று அப்.பவுல் கூறியதன் ஒரு காரணமும் இதுவே ஆகும். அப்.பேதுருவுங்கூட இதே அனுபவத்தை அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 3-இல் குறிப்பிடுகிறார். தம்மிடத்தில் கேள்வி கேட்க வந்த கூட்டத்தாரை நோக்கி அவர், "ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்தில் இருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்" என்கிறார் (அப்போஸ்தலர் 3:19,20).
- xiv) பரிசுத்த ஆவியானவர் நம்மை மறுமைப்படுத்துகிறார்: இந்த மறுரூபமாகுதல் உள்ளான மனுஷனில் அல்லது ஒருவருடைய முழு ஆள்தத்துவத்தில் நடைபெறுவதாகும். இந்த மறுரூபமாகுதலைக் குறித்து அப்.பவுல், "நாமெல்லாம் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்" என்கிறார் (II கொரிந்தியர் 3:18). நாம் முற்றிலுமாக மறுரூபம் அடைய வேண்டும் என்பதும், கிறிஸ்துவின் சுபாவத்தின் சாயலுக்கு ஒப்பாயிருக்க வேண்டுமென்பதுமே நமது அழைப்பாகும். "தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்" (ரோமர் 8:29) என்று அப்.பவுல் ரோமருக்கு எழுதுகிறார்.
- xv) ஆவியின் கனி கொடுக்கும்படி பரிசுத்த ஆவியானவர் உதவி செய்கிறார்: பரிசுத்த ஆவி மாம்சத்தின் செய்கைகளை அல்லது கிரியைகளை அழித்துப் போடுவதாக நாம் ஏற்கனவே கண்டோம். மாம்சத்தின் கிரியைகளை அழிப்பது மட்டுமல்ல, நாம் ஆவியின் கனிகளைக் கொடுக்கவும் அவர் உதவி செய்கிறார். "ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை" (கலாத்தியர் 5:22,23).
- xvi) பரிசுத்த ஆவியானவர் உள்ளான மனிதனை பெலப்படுத்துகிறார்: இரண்டு காரணங்களுக்காக ஒரு விசுவாசி தனது உள்ளான மனுஷனில் பெலப்படுத்தப்பட வேண்டும். முதலாவதாக, நாம் எல்லா சோதனைகளையும், பரீட்சைகளையும் சகிக்கவும், கிறிஸ்துவுக்காகப் பாடுபடவும் கூடியவர்களாகவும் இருக்கும்படி உள்ளான மனுஷனில் பெலப்பட வேண்டும். அப்.பவுல் கொலோசெயரைக் குறித்து எழுதும்போது, "சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும்" அவர்களுக்காக வேண்டுதல் செய்வதாகக் கூறுகிறார் (கொலோசெயர் 1:11). "அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும்" என்று எபேசியர் 3:16ல் நாம் வாசிப்பது போல இந்தப் பெலன் பரிசுத்த ஆவியினாலே உண்டாகிறது.
இரண்டாவதாக, சாத்தானை எதிர்க்கவும் அவனை மேற்கொள்ளவும் ஒரு விசுவாசி தனது உள்ளான மனுஷனின் பெலப்பட வேண்டும். "கடைசியாக என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும், இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" என்று அப்.பவுல் எபேசிய விசுவாசிகளுக்கு எழுதுகிறார் (எபேசியர் 6:10-12). - xvii) தேவனை ஆவியோடு தொழுது கொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவி செய்கிறார்: சமாரியா ஸ்திரீயினிடத்தில் கர்த்தராகிய இயேசு, "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்" என்றார் (யோவான் 4:24). அப்.பவுல் பிலிப்பியருக்கு எழுதும்போது, "ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்" என்று கூறுகிறார் (பிலிப்பியர் 3:3).
- xviii) ஆவியின் பிரமாணம் என்றழைக்கப்படுகிற ஒரு மேலான பிரமாணத்தைப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்: ரோமருக்கு எழுதும்போது அப்.பவுல் கூறுவதாவது: "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" (ரோமர் 8:1,2). இதுவே மிகவும் மேலான பிரமாணமாகும். இதில் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தின் அடிமைத்தனமும், ஆக்கினைத் தீர்ப்பும் இல்லை.
- xix) பரிசுத்த ஆவியானவர் தம்முடைய பலத்தினால் நம்மை வழுவாதபடி காக்கிறார்: "கடைசிக் காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது" என்று அப்.பேதுரு கூறுகிறார் (I பேதுரு 1:5). ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் என்றென்றுமாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறார் என்றும், நித்திய காலமாய் பத்திரமாய் இருக்கக்கூடும் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால் அதற்கு எந்தவிதமான வேத ஆதாரமும் இல்லை. ஏனெனில் அப்.பவுல், "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்" என்று கூறுகிறார் (எபிரெயர் 10:38,39). அஜாக்கிரதையாக இருந்தால் எந்த மனுஷனும் பின்வாங்கி போய் அவன் முழுவதுமாய்க் கெட்டுப் போகக் கூடும் எனவும் இங்கு அப்.பவுல் குறிப்பிடுகிறார். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரையும் நம்மை வழுவாதபடி காக்கிறவர் பரிசுத்த ஆவியானவரே.
- xx) தேவனுடைய அன்பு: நமக்கு அருளப்பட்ட பரிசுத்தாவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது (ரோமர் 5:5). இந்த தேவ அன்பு பரிசுத்தாவியின் மூலமாக நமக்குள் கடந்து வரும்போது பகைவர்களையும் நேசிக்க முடியும்.
- xxi) பரிசுத்த ஆவியின் சந்தோஷம்: பரிசுத்தாவியினால் நமக்குள் சந்தோஷம் கொண்டுவரப்படுகின்றது (ரோமர் 14:17). விருந்தின் மூலமாக உண்டாகும் சந்தோஷம் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கின்றது. புதிய உடைகளை அணியும் போது உண்டாகும் சந்தோஷம் குறைந்த வாழ்நாளைக் கொண்டது. பாவ சந்தோஷங்களும் அநித்தியமானது (எபிரேயர் 11:25). கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க பரிசுத்தாவியானவர் உதவுகின்றார் (பிலிப்பியர் 4:4).
ஆ) சபையில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம்
- i) பரிசுத்த ஆவியானவர் எல்லா விசுவாசிகளையும் ஒரே சரீரத்திற்குள்ளாக அபிஷேகம் பண்ணுகிறார்: "நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்" என்று அப்.பவுல் கூறுகிறார் (I கொரிந்தியர் 12:13).
- ii) பரிசுத்த ஆவியானவர் தம்முடைய சித்தத்தின்படி ஆவியின் வரங்களை ஒவ்வொரு விசுவாசிக்கும் பகிர்ந்தளிக்கிறார்: "ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில் ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்" என்று அப்.பவுல் கூறுகிறார் (I கொரிந்தியர் 12:7-11). ஆவியின் வரங்களின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் தம்மை சபைக்கு வெளிப்படுத்தி கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக வளரும்படி அதனைப் பக்தி விருத்தியடையச் செய்கிறார்.
இ) தேவனுடைய ஊழியக்காரரில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம்
- i) பரிசுத்த ஆவியானவர் தேவ ஊழியரை அவர்களுடைய ஊழியத்திற்கென்று அபிஷேகித்து வழி நடத்துகிறார்: அந்தியோகியாவில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் கூடி உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருந்தபோது "பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார்" என நாம் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 13:2). "ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்" என்று அப்.பவுல் சபையின் கண்காணிகளுக்குப் புத்தி சொல்லுகிறார் (அப்போஸ்தலர் 20:28). அதே அதிகாரத்தில் அவர், "இப்பொழுது நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடும் காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதை மாத்திரம் அறிந்திருக்கிறேன்" என்றும் கூறுகிறார் (வசனம் 22,23). இங்கு பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஊழியக்காரரோடு கூடச் செல்வது மாத்திரமல்லாமல், அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணவும் தேவனுக்கு ஊழியஞ்செய்யவும் அவர்களை அபிஷேகம் பண்ணுகிறார் என்பதும் தெளிவாகிறது. "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்" என்று நாம் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 10:38).
- ii) தேவனுடைய ஊழியக்காரர் சபைக்குத் தூதுகளைக் கொடுக்கும்படி அவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் தூதுகளைக் கொடுக்கிறார்: வெளிப்படுத்தின விசேஷம் 2, 3 அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ள தூதுகள் நேரடியாக சபைகளின் தூதர்களுக்கு அதாவது, சபைகளில் ஊழியக்காரருக்குக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு தூதுக்குப் பின்னும், "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சபையின் விசுவாசிகளுக்குப் போதிக்கும்படியாக தேவனுடைய ஊழியக்காரருக்குத் தூதுகளைக் கொடுப்பது பரிசுத்த ஆவியானவரே என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது.