5. வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தன்னிடம் கேட்டவர்களுக்குக் கீழ்க்கண்டவைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று பேதுரு சொன்னார் (அப்போஸ்தலர் 2:38).

(i) மனந்திரும்புதல் (ii) பாவமன்னிப்பு (iii) ஞானஸ்நானம் (iv) பரிசுத்தாவியின் வரம்.

மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்று பேதுரு சொன்ன இந்த ஐந்தாவது ஆவிக்குரிய அனுபவம் வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கையாகும் (அப்போஸ்தலர் 2:40).

தரம் வாரியாக பொருட்கள் பிரிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்கள் வேறு பிரிக்கப்படுவது பரிசுத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான்;.

"அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல், தனியே வாசமாயிருப்பார்கள்" (எண்ணாகமம் 23:9). தேவனுடைய ஜனங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசத்தைக் காண்பிக்கும் பொருட்டு இந்த வேறு பிரிக்கப்படுதல் உண்டாகின்றது. இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும் (I யோவான் 3:10). இந்த வேறு பிரிக்கப்படுதல் தொடக்கமாக இருக்கின்றது, இது நியாயத்தீர்ப்பு வரை தொடர்கிறது.

மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து செம்மறி ஆடுகளைத் தமது வலது பக்கத்திலும் வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார் (மத்தேயு 25:32,33).

அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற (பரலோக) ராஜ்யத்தைச் சுதந்திரத்துக் கொள்ளுங்கள் என்பார் (மத்தேயு 25:34). அப்பொழுது இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார் (மத்தேயு 25:41). அந்தப்படி இவர்கள் நித்திய அக்கினியை (அக்கினிக் கடல்) அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை (பரலோக ராஜ்யம்) அடையவும் போவார்கள் (மத்தேயு 25:46).

நித்திய ஜீவனை அடையப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு இந்த வேறு பிரிக்கப்படுதல் மிகவும் அவசியமானதாகும்.

  • i) சுயத்திலிருந்து விடுதலை: வேறு பிரிக்கப்படுதல் என்பது மனிதனை அவன் சுயத்திலிருந்து விடுவிப்பதாகும். "கடைசி நாட்களில் மனிதர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பு இல்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கம் இல்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்" (II தீமோத்தேயு 3:1-5). மேற்கண்ட 20 வகையான பாவங்களும் சுயம் கிரியை செய்கிறவர்களிடத்தே தங்கும். இவர்கள் தேவ பிரியராக இருக்க வேண்டும், தேவ பக்தியின் பெலனையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்.
  • ii) தேவன் கொடுக்கிற விசேஷமான அழைப்பினால் இனத்தை விட்டு, தகப்பன் வீட்டை விட்டு, இருக்கும் இடத்தை விட்டு செல்லுகிற வேறு பிரிதல்: "கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: உன் தேசத்தையும் உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்றார்". ஆபிரகாம் ஆரான் என்கிற இடத்தில் இருந்தபோது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி இவ்விதமாக வேறுபிரிதலின் அழைப்பைக் கொடுத்தார். ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தபோது கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படி ஆபிரகாமை ஆசீர்வதித்தார். அது போல யாரெல்லாம் தேவன் தங்களுக்குக் கொடுக்கிற விசேஷமான அழைப்பைப் பெற்று அதற்குக் கீழ்படிகிறார்களோ அவர்களை தேவன் இன வெறியிலிருந்து வெளியே கொண்டு வருகிறார். எல்லா மொழிகளைப் பேசும் மக்களோடு ஐக்கியப்படுத்துகிறார். தவறான விக்கிரக ஆராதனையிலிருந்தும் வேறுபிரித்து தம்முடைய வாக்குத்தத்தத்தின்படி கர்த்தருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிகிறவர்களை ஆசீர்வதிக்கிறார் (எபேசியர் 2:13,14; I கொரிந்தியர் 10:7,8; எபேசியர் 5:5; மத்தேயு 19:29).
  • iii) பூலோக ஜாதிகளின் அசுத்தங்களை விட்டு விடுதல்: பூலோக ஜாதிகளின் அசுத்தங்களை விட்டுவிட வேண்டும் (எஸ்றா 6:21). அழிவுள்ள மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் போன்றவைகளின் உருவங்களை வணங்குவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கின்றது (ரோமர் 1:23). பெண்கள் ஒருவருக்கொருவர் அவலட்சணமான காரியங்களைச் செய்தல் (ரோமர் 1:26), ஆண்கள் ஒருவருக்கொருவர் சரீர சம்பந்தமான பாவங்களைச் செய்தல் (ரோமர் 1:27), மிருகங்களோடு புணர்ச்;சி செய்தல் (லேவியராகமம் 18:23), பிறருடைய மனைவியோடு சேர்தல் - விபச்சாரம் (லேவியராகமம் 18:20) தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது. நெருங்கின உறவுமுறையோடு உடலுறவில் ஈடுபடக்கூடாது (லேவியராகமம் 18:6-17). இவர்களை விட்டு விலகியிருந்து, தங்களை பரிசுத்தமாய்ப் பாதுகாத்து கொள்வதுதான் வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கையாகும்;.