6. வெற்றியுள்ள வாழ்க்கை

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (I கொரிந்தியர் 15:57). கிறிஸ்து இயேசுவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்க பண்ணுகிறார் (II கொரிந்தியர் 2:14). இவையெல்லாவற்றிலும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம் (ரோமர் 8:37).

ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாக நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் (எபேசியர் 6:13). ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்வான் (வெளி. 21:7).

ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி கொள்ள வேண்டிய காரியங்கள் குறித்து இனி காண்போம்

1) மாம்சத்தை மேற்கொள்ளுதல்

மாம்சம் என்பது மனிதனின் சரீர உறுப்புகளில் இருந்து எழும்பும் பாவ இச்சைகளைக் குறிக்கும். மனிதன் மாம்ச இச்சைகளை நிறைவேற்றக்கூடாது (கலாத்தியர் 5:16). மாம்ச சிந்தை மரணம். இது தான் தொடக்கமாகும் (ரோமர் 8:6). ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தல் மாம்ச சிந்தையின் தொடர்ச்சியாகும் (மத்தேயு 5:28). விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுக்கள் போன்றவை மாம்சத்தின் கிரியைகளாகும் (கலாத்தியர் 5:19-21). சவுல் தன்னுடைய மகனான யோனத்தானை தனக்குப் பின்பு ராஜாவாக்க நினைத்தான். ஆனால் தேவன் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். இதனால் தாவீதைக் கொன்று போட சவுல் முயற்சித்தது மாம்சத்தின் கிரியையாகும் (I சாமுவேல் 20:30).

மாம்சத்தை வெற்றி கொள்வதற்கான வழிகள்

  • i) கிறிஸ்து இயேசுவின் சிந்தை நம்மிலே உண்டாக வேண்டும் (பிலிப்பியர் 2:5)
  • ii) உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது (நீதிமொழிகள் 4:25)
  • iii) உன் மாம்சத்தைப் பாவத்திற்குள்ளாக உன் வாய்க்கு இடங்கொடாதே (பிரசங்கி 5:6)
  • iv) சோதனை தரும் இடங்களுக்குச் செல்லக்கூடாது (II சாமுவேல் 13:9-14)
  • v) பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (II தீமோத்தேயு 2:22)
  • vi) உங்களது ஆசை இச்சைகளை சிலுவையில் அறைந்து விட வேண்டும் (கலாத்தியர் 5:24)
  • vii) இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைத்துப் பார்க்க வேண்டும் (I பேதுரு 4:1,2)
  • viii) பரிசுத்த ஆவியினால் மாம்சத்தின் செயல்களை அழித்து விட வேண்டும் (ரோமர் 8:13)
  • ix) இயேசு கிறிஸ்துவிற்காய் வாழ்ந்திட வேண்டும் (கலாத்தியர் 2:20)
  • x) ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும் (கலாத்தியர் 5:16)

இப்படி செய்தால், நீங்கள் மாம்சத்தை வெற்றி கொள்ள முடியும்.

2) உலகத்தை வெல்லுதல்

"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (I யோவான் 2:15-17).

கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்னும் மூன்றையும் உலகம் என்கிறோம்.

ஏவாளுக்கு சாத்தான் இந்த காரியங்களில் தான் சோதனைகளைக் கொடுத்தான். ஏவாள் தோற்றுப் போனாள். இயேசு கிறிஸ்துவுக்கும் சாத்தான் சோதனைகளைக் கொடுத்தான். இயேசு கிறிஸ்து வெற்றி பெற்றார்.

உலகத்தை வெற்றி பெறுவதற்கான வழிகள்

  • i) மாயையைப் பாராதபடிக்கு உன் கண்களை விலக்க வேண்டும் (சங்கீதம் 119:37).
  • ii) உன் காலைத் தீமைக்கு விலக்க வேண்டும் (நீதிமொழிகள் 4:27).
  • iii) உலகத்திலும், உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள் (I யோவான் 2:15)
  • iv) உலகத்தை ஜெயிப்பதற்கு நீங்கள் தேவனால் பிறந்திருக்க வேண்டும் (I யோவான் 5:4)
  • v) விசுவாசத்தைக் கொண்டு உலகத்தை வெற்றி கொள்ள வேண்டும் (I யோவான் 5:4).
  • vi) உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக் கூடாது (ரோமர் 12:2).

3) சாத்தானை வெற்றி கொள்ளுதல்

சாத்தான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் எதிரியாக இருக்கின்றான். வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு (எபேசியர் 6:12).

அ) சாத்தானின் கிரியைகள்

சாத்தான் தேவனுடைய கட்டளைகளை விட்டு மனிதர்களை வழி விலகச் செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறான்.

  • i) தந்திரமான முறை: சாத்தான் தந்திரமான முறையில் கிரியை செய்து கொண்டிருக்கிறான் (II கொரிந்தியர் 2:11). நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கர்த்தர் கட்டளையிட்டார் (ஆதியாகமம் 2:17). சர்ப்பம் ஸ்திரியை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை என்றது (ஆதியாகமம் 3:4). ஏவாள், சர்ப்பம் என்னை வஞ்சித்து விட்டது, நான் புசித்தேன் என்றாள் (ஆதியாகமம் 3:13). அதாவது, தேவன் சொன்னது தான் உண்மையானது என்பதை உணர்ந்து கொண்டாள்.
  • ii) சாத்தானின் தூண்டுதல்: இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி, சாத்தான் யூதாசைத் தூண்டினான் (யோவான் 13:2). சாத்தான் அவனுக்குள் புகுந்தான் (யோவான் 13:27). பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும்படி, சாத்தான் இருதயத்தை நிரப்பினான் (அப்போஸ்தலர் 5:3).
  • iii) அக்னியாஸ்திரங்கள்: "பொல்லாங்கன் எய்யும் அக்னியாஸ்திரங்களை அவித்துப் போட வேண்டும்" (எபேசியர் 6:16). அக்கினியாஸ்திரங்கள் என்பது தகாததைச் செய்யும்படித் தூண்டுதல், பொல்லாத சிந்தனைகளைக் குறிக்கும்.
  • iv) சாத்தானின் கண்ணிகள்: சாத்தானுடைய கண்ணிகளில் பலர் சிக்குண்டு இருக்கின்றார்கள் (II தீமோத்தேயு 2:26). அவர்களை சாந்தமான உபதேசத்தினால் சாத்தானின் கண்ணிகளிலிருந்து விடுவிக்க வேண்டும்.

ஆ) சாத்தானைத் தோற்கடிக்க வழிகள்:

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் (ஆதியாகமம் 3:15). பெண்ணின் வித்தாக இயேசு கிறிஸ்து பிறந்தார் (கலாத்தியர் 4:5). பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி தேவகுமாரன் வெளிப்பட்டார் (I யோவான் 3:8). சமாதானத்தின் தேவன் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார் (ரோமர் 16:20). சாத்தான் மீதுள்ள வெற்றியைத் தேவன் நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார்.

  • i) சாத்தானுக்கு இடம் கொடுக்கக் கூடாது: பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபேசியர் 4:27).
  • ii) சர்வாயுதவர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: தீங்கு நாளிலே அவைகளை எதிர்க்க சர்வாயுதவர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் (எபேசியர் 6:11).
  • iii) இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஜெயம்: ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்தார்கள் (வெளி. 12:11).
  • iv) சாட்சியின் வசனம்: சாட்சியின் வசனத்தினாலும் சத்தானை ஜெயித்தார்கள் (வெளி. 12:11). உங்கள் வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்திருக்கும் நன்மைகளைச் சாட்சியாகச் சொல்லுங்கள்.
  • v) பரிசுத்த ஆவியின் வல்லமை: நசரேயனாகிய இயேசுவைத் தேவன் வல்லமையினால்... அபிஷேகம் பண்ணினார். அதனால் பிசாசின் வல்லமையில் அகப்பட்டு இருந்தவர்களை விடுவித்தார் (அப்போஸ்தலர் 10:38). பரிசுத்தாவியின் வல்லமையைப் பெற்றுக்கொள்வோர் பிசாசின் வல்லமையில் அகப்பட்டவர்களை விடுவிக்க முடியும்.
  • vi) தேவனுடைய வசனம்: தேவனுடைய வசனம் சாத்தானை வெற்றி கொள்ள உதவும். இயேசு கிறிஸ்து தேவ வசனத்தைக் கொண்டே சாத்தானை வென்றார். சமயத்திற்கேற்ற தேவ வசனங்களைப் பயன்படுத்த நாம் அறிந்திருப்போமாக.
  • vii) இயேசு கிறிஸ்துவின் நாமம்: என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள் என்று இயேசு சொன்னார் (மாற்கு 16:17). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லும்பொழுது, பிசாசு ஓடிப்போவான்.
  • viii) பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்: தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் (யாக்கோபு 4:7). பிசாசை எதிர்ப்பதற்கு முன், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
  • ix) பிசாசைத் துரத்த முடியும்: பிசாசுகளைத் துரத்தும்படி மாத்திரமே இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார் (மாற்கு 16:17).

4) சத்துருக்களிடம் எப்படி காணப்பட வேண்டும்

என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் (மத்தேயு 24:9).

ஒரு தேவ மனிதனுக்கு சத்துருக்கள் அவன் வீட்டாராக இருக்கலாம். ஒரு தேவ மனிதனுடைய சத்துருக்கள் அவன் வீட்டாரே (மத்தேயு 10:36). யோசேப்பின் சகோதரர்கள் அவனைப் பகைத்தார்கள் (ஆதியாகமம் 37:4). தாவீதின் மனைவியாகிய மீகாள் அவனைத் தன் இருதயத்தில் அவமதித்தாள் (II சாமுவேல் 6:16). இயேசு கிறிஸ்துவின் சகோதரரும் அவரை விசுவாசிக்கவில்லை (யோவான் 7:5). ஒரே வீட்டில் ஆவிக்குரியவர்களும் மாம்சத்திற்குரியவர்களும் இருக்கலாம். மாம்சத்துக்குரியவர்கள் ஆவிக்குரியர்களை பகைக்கலாம். ஒரு தேவ மனிதனுக்கு விரோதமாக பேலியாளின் மக்களும் விரோதமாகச் செயல்படலாம். பேலியாளின் மக்களின் வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கக் கூடாது (I சாமுவேல் 10:27). இயேசு கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவு இருக்க முடியாது (II கொரிந்தியர் 6:15).

"ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். நீங்கள் பழிவாங்க வேண்டாம். உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்கு போஜனம் கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு பானம் கொடு; நீங்கள் தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்ல வேண்டும்" (ரோமர் 12:17-21). தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் (மத்தேயு 5:39). அதன் அர்த்தம் என்ன? ஒரு மனிதன் தானே நீதியைச் சரிக்கட்டுகிறவனாக இருக்கக் கூடாது. செயல்படாமல் அமைதியாயிருந்து மற்றவர்களுக்கு அநீதி செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படவில்லை. பதிற்செய்கிற தேவனுடைய கரங்களில் தீமை செய்கிறவர்களை ஒப்புக் கொடுக்கக் கூடாது என்றும் சொல்லப்படவில்லை.

எப்படி பரலோகத்தில் இருக்கிற பிதா தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறாரோ அதுபோல நீங்கள் உங்கள் சத்துருக்களைச் சிநேகிக்க வேண்டும், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். அப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள். பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருப்பீர்கள் (மத்தேயு 5:44-48).

பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம் (I கொரிந்தியர் 15:26). நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியை சாப்பிட்டதினால் ஆத்துமாவில் மரணம் வந்தது (ஆதியாகமம் 2:17). ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது (ரோமர் 5:12). பாவத்தின் சம்பளமான மரணத்தை இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டதால், பாவத்திற்குப் பரிகாரம் உண்டானது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினால் மரணம் ஜெயமாக விளங்கப்பட்டது (I கொரிந்தியர் 15:20). கிறிஸ்துவை விசுவாசித்து தேவனுடைய கிருபையைப் பெற்று பரிசுத்தமாக்கப்படுகிறவர்கள் தேவனுடைய புத்திரர்களாக காணப்படுகிறபடியால் ஆத்துமாவில் ஜீவன் பெற்று இரட்சிப்பைக் காத்துக்கொள்ளுகிறவர்களாக இருப்பார்கள். நித்திய மரணத்திற்கு நீங்கலாகி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது போல அழியாமையை சாவாமையைத் தரித்துக் கொண்டவர்களாக வானவருடைய சாயலை உடையவர்களாக உயிர்த்தெழுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான் (I கொரிந்தியர் 15:23). இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம் (I தெசலோனிக்கேயர் 4:13-17). நித்திய மரணத்தை மேற்கொண்டவர்களாக நித்திய ஜீவனை அடைந்திருப்பார்கள்.