7. இயேசுவைப் போல மாறுதல்

இயேசு கிறிஸ்துவிடம் இருந்த தெய்வீக சுபாவங்களை நாம் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்.

இயேசு கிறிஸ்துவைப் போன்றவரின் அடையாளங்கள்

இயேசு கிறிஸ்துவைப் போல மாறினவர்கள் சொல் தவறாதவர்களாக இருப்பார்கள் (யாக்கோபு 3:2). மனதார சத்தியத்தைப் பேசுவார்கள் (சங்கீதம் 15:2). அவர்கள் புறங்கூறமாட்டார்கள் (சங்கீதம் 15:3).

அயலான் மேல் எடுக்கப்படும் நிந்தையான பேச்சுக்களை அவர்கள் பேசமாட்டார்கள் (சங்கீதம் 15:3). ஆணையிட்டதில் நஷ்டம் வந்தாலும், தவறாதிருப்பார்கள் (சங்கீதம் 15:4). பரிசுத்தாவியைக் கொண்டு சரீரத்தை அடக்கி ஆள்வார்கள் (யாக்கோபு 3:2). விசுவாச வார்த்தைகளையே எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பார்கள் (ரோமர் 10:9,10). இயேசு கிறிஸ்துவே இவர்களுக்குள் பிழைத்து இருக்கிறார் (கலாத்தியர் 2:20). நீடிய பொறுமை அவர்களிடத்தில் காணப்படும் (யாக்கோபு 5:11). அவர்கள் கர்த்தருக்கென்று கனி கொடுப்பார்கள் (யோவான் 15:16). தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் சரீரப்பிரகாரமாக வாசமாக இருக்கிறது (கொலோசெயர் 2:9). நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் (கொலோசெயர் 2:10), (எபிரெயர் 6:2), (மத்தேயு 5:48). கீழ்க்கண்ட காரியங்களில் பூரணத்தை பெற்றிருப்பார்கள்.

  • i) பரிபூரண ஜீவன்: "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாக இருந்தது" (யோவான் 1:4). இந்த ஜீவனை மனிதருக்குப் பரிபூரணமாகக் கொடுப்பதற்கே இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தார் (யோவான் 10:10). பரிசுத்தாவியின் மூலமாக இந்த ஜீவன் நமக்குள் கொண்டு வரப்படுகிறது. அதன் பின்பு பரிபூரண ஜீவனாக மாறுகின்றது.
  • ii) பரிபூரண அன்பு: பரிசுத்தாவியின் மூலமாகவே தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் ஊற்றப்படுகிறது (ரோமர் 5:5). பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளுகிறது (I யோவான் 4:18). தேவனுடைய அன்பிலே பூரணப்பட்டவன் தவறான பயத்தோடு காணப்படமாட்டான்.
  • iii) பரிபூரண கிருபை: இயேசு கிறிஸ்து மூலமாகத் தான் தேவ கிருபை உண்டாகின்றது (யோவான் 1:17). கிருபையினாலே தான் இரட்சிப்பு உண்டாகிறது (எபேசியர் 2:8). மக்கெதோனியா நாட்டு சபை மக்களுக்கு காணிக்கை கொடுப்பதற்கு கிருபை உண்டாயிருந்தது (II கொரிந்தியர் 8:1,2). தேவ ஊழியத்தைச் செய்வதற்கும் தேவ கிருபை தேவையாக இருக்கிறது (எபேசியர் 3:7). அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம் (யோவான் 1:16). அப்போஸ்தலர்கள் எல்லோர் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது (அப்போஸ்தலர் 4:33).
  • iv) பரிபூரண மகிமை: பாவம் செய்ததினால் மனிதன் மகிமையை இழந்து போனான் (ரோமர் 3:23). தேவ மகிமையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்குப் பாவத்தை விட்டு விலக வேண்டும். மகிமையின் மேல் மகிமையடைந்து பூரண மகிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் (II கொரிந்தியர் 3:18).
  • v) பரிபூரண விசுவாசம்: விசுவாசத்தைத் துவக்குகிறவரும், பூரணப்படுத்துகிறவரும் இயேசு கிறிஸ்து தான் (எபிரெயர் 12:1). கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசியர் 2:8). மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, ஞானஸ்நானம், பரிசுத்தாவியின் வரம் போன்ற அனைத்து ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசுவாசம் தேவைப்படுகிறது (எபிரெயர் 11:6).
  • vi) பரிபூரண தேவசித்தம்: தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதனை செய்திட வேண்டும் (ரோமர் 12:2). அப்போஸ்தலனாகிய பவுலைக் குறித்து பரிபூரணமான தேவசித்தம் என்ன என்பதை கர்த்தர் சொன்னது என்னவென்றால் "அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்" (அப்போஸ்தலர் 9:15).
  • vii) பரிபூரண பரிசுத்தம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஆத்துமா சுத்திகரிக்கப்படுகிறது (I யோவான் 1:7; வெளி. 1:6). பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுதலை பெற முடியும். இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படிந்து தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்போது எகிப்தின் சேனையைப் போல யுத்தம் செய்கிற பாவ சுபாவத்திலிருந்து விடுதலை பெறக்கூடிய இன்னொரு அற்புதமான இரட்சிப்பை அடைய முடியும். பரிசுத்த ஆவியினால் கழுவப்படும் பொழுது மனிதனின் ஆவியில் பரிசுத்தம் உண்டாகிறது (I கொரிந்தியர் 6:11). பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடக்க முடியும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாக வேண்டும் (வெளி. 22:11) ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் குற்றமற்றதாய்க் காக்கப்படவும் வேண்டும் (I தெசலோனிக்கேயர் 5:23; II கொரிந்தியர் 7:1).
  • viii) பரிபூரண சந்தோஷம்: கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் (பிலிப்பியர் 4:4). மனந்திரும்புதல், பாவமன்னிப்பு, ஞானஸ்நானம், பரிசுத்தாவியின் வரம் பெற்றுக் கொள்ளும் போது உண்டாகும் சந்தோஷம் நிரந்தரமானது (II கொரிந்தியர் 8:2). சமாதானத்தின் தேவன் உள்ளத்திற்குள் வாசம் பண்ணிக்கொண்டிருப்பதால் நிரந்தரமான சந்தோஷத்தை அனுபவமாக்கிக் கொள்ள முடியும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பது தேவ பெலன் (நெகேமியா 8:10).
  • ix) பொறுமை: நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது (யாக்கோபு 1:4). சோதனைகளில் அதைரியப்படக்கூடாது. பொறுமைக்கு நல்ல உதாரணம் யோபு பக்தன் (யாக்கோபு 5:11). அநேக இழப்புகள் குடும்பத்திலே வந்த போதும் பொறுமையுடன் கர்த்தரில் சார்ந்து கொண்டார். யோபு இழந்ததையெல்லாம் இரண்டு மடங்காக கர்த்தர் கொடுத்தார். "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது" (எபிரெயர் 10:36). பாடுகள் இல்லாத பூரணம் இல்லை. உபத்திரவத்தின் வழி இல்லாமல் பரலோகத்திற்குச் செல்ல வேறு பாதை இல்லை. "அவர் நிமித்தமாக பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது" (பிலிப்பியர் 1:29). "என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பெயரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்" (மத்தேயு 5:11). "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்" (II திமோத்தேயு 3:12). இயேசு கிறிஸ்து சொன்னார் "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்" (யோவான் 16:33). உலகத்தை ஜெயித்த இயேசு தம்முடைய பிள்ளைகளுடைய ஒவ்வொரு பாடுகளின் பாதையிலும் கூட இருந்து ஜெயம் கொடுக்கிறவராக இருக்கிறார். பூரணராகவும் நிறைவுள்ளவர்களாகவும் காணப்படும்படி செய்வார்.
  • x) பரிபூரண வயது: "பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்" (எபிரெயர் 5:14). கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தின் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ள யார் மந்தமுள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மெல்கிசேதேக்கைப் பற்றி விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்க குழந்தையாயிருக்கிற நிலையில் காணப்படுகிறவர்களுக்கு நீதியைக் குறித்து போதித்து விளங்க வைப்பது அரிதாயிருக்கும். ஆகவே ஆவிக்குரிய முதிர்ச்சி (Spiritual Maturity) அடைந்த பிறகு பலமான ஆகாரமான போதனைகளை உபதேசிப்பது பலனுள்ளதாகக் காணப்படும். ஆகவே எபிரெய நிருபக்காரர் குறிப்பிடுவது என்னவென்றால், யார் நன்மை தீமை இன்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களை உடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களாக ஆவிக்குரிய முதிர்ச்சி அடைகிறார்களோ அவர்களே பலமான ஆகாரமாகிய உபதேசத்தை போதிக்கும்போது அதை விளங்கிக் கொண்டு அதை உயர்வானதாகக் கருதி கிறிஸ்துவின் ஆசாரியத்துவ ஊழியத்தின் முக்கியத்துவத்தையும் பங்களிப்பின் மேன்மையையும் அனுபவமாக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட பூரண வயதுள்ளவர்களாக ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைந்தவர்களுக்கு தேவனுடைய வார்த்தையிலுள்ள (அல்லது) தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களைப் போதிக்க வேண்டியது இருக்காது (I கொரிந்தியர் 2:1 - 3:2; எபிரெயர் 6:1-3).
  • xi) பூரண அறிவு: "...தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே" (கொலோசெயர் 3:9,10). மேலும் தேவனுடைய சாயலுக்கொப்பாய் மறுரூபமடைதலைக் குறித்து விளக்கங்களை முறையே எபேசியர் 4:22-24; ரோமர் 12:1,2; ரோமர் 13:14; எபேசியர் 4:11-13; எபேசியர் 5:8-11; எபேசியர் 1:17-19 (The inner man's vision of Christ); எபேசியர் 1:11,12; I கொரிந்தியர் 15:45; கலாத்தியர் 3:26-29; II கொரிந்தியர் 3:18; I யோவான் 3:2 ஆகிய வசனங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.